Saturday, 28 March 2015

பொதுமக்கள் அரசியல் பேசலாமா?



"அரசியல் பேசேல்" என்று இன்றைய சமுதாயம் ஓதுகிறது. இதனால் ஒட்டுமொத்த தலைமுறையினரின் வாழ்க்கை மட்டுமின்றி நாட்டின் நிலையே கேள்விக்குறியாகும் சூழல் உருவாகி இருக்கிறது. 

ஒரு ஆட்சியில் நிலவும் பிரச்னைகளையும் ஆட்சி செயல்பாட்டாக்கங்களையும் பொதுமக்கள் கண்டிப்பாக ஆய்வு செய்திடல் வேண்டும் . ஆட்சியின் நிறைக்குறைகளை மக்கள் பகிர்ந்து ஆய்ந்தால்தானே ஒரு நாட்டின் பிரச்னைகள் தீர்க்கப்படும்? 

இலவச பொருட்களை வாங்கிகொள்ளும்போது நன்றி கூறுவதோடு நமது வாயுரிமை சிறைபிடிக்கப்படுகிறது என்பதை நாம் உணரவில்லை போலும். 
இது மக்களாட்சி தானே? மன்னராட்சி இல்லையே? 
மக்களுக்காக மக்களுள் ஒருவரால் நடத்தப்படும் ஆட்சியிலா நம்முடைய வாய்க்கு கடிவாளம் போடப்பட்டிருகிறது. அந்த அளவுக்கு மக்களுக்கு ஆளவந்தோர் மீது அச்சம். 

அரசியல் பதிவுகளை போடவேண்டாம், அரசியல் என்பது சாக்கடை என்று சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கத்தான், நாட்டில் ஏராளமான பிரச்னைகள் நிலவுகிறது. இன்னும் அழுத்தமாக சொன்னால் அவர்களால்தான் நாடு பெரும் தாக்கங்களை சந்தித்து வருகிறது என்றே சொல்லலாம். 

ஒரு நாட்டின் ஆட்சியார்க்கு பொதுமக்கள் ஆய்வாலோசனைகள் வழங்கினால்தான் அவர்களால் நாட்டை சீராக வழிநடத்தி இயக்க முடியும். மக்கள் வாய்மூடி இருப்பதென்பது ஆகாது. அதே சமயத்தில் ஆட்சியார் சரியான முறையில்தான் நாட்டை வழிநடத்தி கொண்டு செல்கின்றனறா என்றும் ஆய்ந்து அறிக்கைகள் வெளியிட மக்கள் தயங்கவே கூடாது. 

அரசியலானது நமது இல்லத்திற்கு அப்பாற்பட்டது என்று நினைத்தால், அது நாளை நமது வாழ்க்கைக்கு அப்பால் போய்ச்சேர்ந்து விடும். வாழ்க்கையை விட்டு பிரியும் அரசியல் நிச்சயம் சமுதாயத்தை விட்டும் பிரிகிறது. அச்சத்தின் காரணத்தால் சமுதாயத்தில் இருந்து நீக்கப்பட்ட அரசியல் தான் இன்றோ நாளையோ ஒரு ராட்சத மன்னனின் கையில் அகப்படும். மேலும் அங்கேயே நிலைப்படும்.
இந்த நிலையில் பெரும் விசுவரூபம் எடுத்த ஆட்சியார் மக்களின் கனவுகளை உடைப்பர். அவரை சார்ந்தோர் மற்றும் மேல்குடிகளின் எண்ணங்கள் நிறைவு பெரும். சாமானியர் நம்முடைய எண்ணங்கள் எண்ணிஎண்ணி அடுக்கி வைக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். அங்கேயே தான் மக்கள் நம்முடைய ஆசைகளும் இலக்குகளும் வடிகட்டப்படுகிறது என்பதை நம்மால் தாராளமாய் உணர முடியும்.

அரசியல் பேசாத ஒரு காரணத்தாலேயே தான் நாம் இன்றும் கடன் பெற்று கல்வி கற்கிறோம். அந்த கடனை அடைக்க வாழ்நாளை அர்பணிக்கிறோம். சாமானியனின் வாழ்க்கை ஆற்றில் விழுந்த குடம் போல தள்ளாடி தள்ளாடி கரை சேர துடிக்கும். ஆனால் அடுத்த 5 வருடங்களில் பெருக்கெடுக்கும் புது வெள்ளத்தில் மீண்டும் அது ஆற்றில் அடித்துச்செல்லப்படும். 
இதற்கு முழுக்க முழுக்க காரணம் "நாம்". 

நாட்டை ஆள்வதற்கு ஏற்றவர் யார்? யார் எப்படி? யார் எவ்வாறு? என்பதை குறித்து ஒரு நாட்டின் குடிமக்கள் கண்டிப்பாக ஆய்ந்து கலந்துரையாட வேண்டும். அரசியல் விமர்சித்தால் அவன் என்னை எதிர்ப்பான் என்ற அவநம்பிக்கையை தயவுசெய்து விட்டொழியுங்கள். இன்று அவர்கள் ஒரு புரட்சியாளனை எதிர்க்கலாம். நாளை நாம் அனைவரும் புரட்சியில் இறங்கினால் நம் எல்லோரையும் எதிர்க்கும் சக்தி அவர்களிடம் இருக்கிறதா? எண்ணுங்கள்.. 

நாட்டை மக்கள் நாம் தான் முன்னேற்ற வேண்டும். சும்மா அரசியல்வாதிகளை நம்பியே காலம் கழிக்கக் கூடாது. அரசியல்வாதிகள் என்போர் மக்களின் மன உணர்வுகளுக்கு ஏற்ப மட்டுமே ஆட்சியை செயல்படுத்த வேண்டும். ஆனால் இன்று இந்தியாவில் அது கொஞ்சம் கூட தென்படவில்லையே ஏன் என்று சிந்திப்பீர்களா? 

மக்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிடும் சாவிதான் அரசியல். இன்று அதுவா நடக்கிறது ? யோசியுங்கள். நாம் அனைவரின் வாயிலும் பூட்டுகள் தொங்கிய வண்ணம் உள்ளன. 

நீங்கள் எந்த அளவிற்கு ஆட்சியார் நிலவரம் பற்றி லேசாக இருக்கின்றீர்களோ அந்த அளவிற்கு நமது வாழ்க்கை இறுக்கப்படும் என்பதில் சற்றும் ஐயம் இல்லை என்பதை கூற வருகிறேன். 

மக்களே தயவுசெய்து விழித்துக்கொள்ளுங்கள்... 
நீங்கள் போராட்டத்தில் களம் இறங்க வேண்டாம்... 
ஆனால் விவாதத்தில் களம் இறங்கலாம்.... குடிமக்கள் நமக்கு முழு உரிமை உண்டு. 

நன்றி!

ஆக்கம்: #அருண்வினோ