Monday, 6 June 2016

திரைப்போக்கனின் எச்சங்கள்!


அறிமுக நடிகனுக்கு
சிவாஜியின் படங்கள் தான்
உயர்க்கல்வி பாடங்கள்!

வேலையை உதறியெரிந்துவிட்டு, பெற்றோர்களை பகைத்துக்கொண்டு, கந்துக்கு கடனைவாங்கிக்கொண்டு, ஊர் விட்டு ஊர் வந்து, உணவு வேளைகளை மறந்து, பத்துக்கு பத்து அறைக்கு வாடகை கொடுக்க பணமின்றி, தங்க இடமுமின்றி, கோடம்பாக்கம் சினிமாக்காரன் சாலையில் முகாமிட்டு, கனவுப் பூச்சிகளாக சிறகடித்துப் பறக்கும் நாயகர்களை பார்க்கும்போது, நான் ஏன் இன்னும் இங்கிருக்கிறேன் என்றுதான் எண்ணத்தோன்றுகிறது. அவர்களைப் போன்றொரு தன்னம்பிக்கை வலிந்த போராட்ட தயாளனாக என் பெற்றோர் என்னை வளர்க்கவில்லையே என்ற புலம்பல்களுக்கு மத்தியில் சிக்கித் தவிக்கிறேன். என்னை இந்த மாபெரும் போராட்ட களத்திற்கு திலகமிட்டு, வாள் கொடுத்து அனுப்பவும் அவர்கள் தயாராக இல்லை என்பது வருந்தத்தக்கதுதான்.
தெரியும்.... 
கடின உழைப்பு, தொழில் பக்குவம் மற்றும் இத்துடன் போராட்டங்களையும், அவமானங்களையும், நெற்றிப்பொட்டில் அறையும் பல நிராகரிப்புகளையும் கடந்து வருவோருக்குத்தான் அந்த சினிமாத்தாய் அருட்கூர்ந்து விடையாற்றுவாள் என்பதும் எனக்குத் தெரியும். அதற்கெல்லாம் நேரமில்லை... எத்தனையோ முறை சினிமா கற்க வேண்டும் என நினைத்திருக்கிறேன். சந்தர்ப்பம் கிடைக்கும்போது இணையத்தில் உடல் மொழி, நடிப்புக் கலை கொஞ்சம் கற்றுக்கொள்கிறேன். சினிமாவுக்குள் வர விரும்புபவன் என்பதால் மிக எளிமையாக நடிப்பு கற்றுக்கொள்ள வேண்டுமென்பதற்காக நான் தெரிவு செய்துகொண்ட படம் 'இரத்தக்கண்ணீர்'. மிக மிக எளிமையிலும் தன் நடிப்புக் கலையை தெறிக்கவிட்டிருப்பார் நம் நடிகவேள். வசனமும், உடல்மொழியும் அவ்வளவான அற்புதம். நாட்டில் நடந்தன, நடப்பன, நடக்க உள்ளன என முக்காலத்தையும் மிக சாதாரணமாக, மிக எளிமையாக தனது படங்களின் மூலம் பதிவுசெய்த தீர்க்கதரிசி அவர்.
ஏன் நடிப்பு திலகம் சிவாஜி கணேசனின் படங்களை முன்னுதாரணமாக நீங்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது என நீங்கள் கேட்கலாம்.
அப்பப்பா.. அது....
ஒன்றாம் வகுப்பு சிறுவனுக்கு உயர்க்கல்வி பாடங்களை நடத்துவது போலத்தான், ஒரு கனவு கண்டுகொண்டிருக்கும் அறிமுக நடிகனுக்கு சிவாஜியின் படங்கள் தான் உயர்க்கல்வி பாடங்கள். எத்துனை உன்னதமான நடிப்பு..!! சுவைகள் மிகுந்த உடல்மொழி..!! வீறு நடை போடும் வசனங்கள்...!! நடைகள்.. உடைகள்... பாவனைகள்...!! அவர் திருவிளையாடலில் நடக்கும் நடைக்கு ஈடாகுமா நமது திறமை என எண்ணியெண்ணி வியந்துள்ளேன். அவரது தலையில் உள்ள உச்சி முடி முதல் காலின் நகம் வரை ஒவ்வொரு உறுப்புகளும் நடிக்கும் என்பதை ஆழ உணர்ந்திருக்கிறேன். எளிமைக்கு நடிகவேள் உயர்மைக்கு நடிகர் திலகம் என இருவரையும் நான் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை..

தொடரும்...

-அருண்வினோ