Tuesday, 22 November 2016

நேந்திரம்பழம் கறி (சமையல்)



தேவையான பொருட்கள்:

நேந்திரம்பழம் - 3 
இஞ்சி பூண்டு விழுது - 3 தேக்கரண்டி
சிறிய வெங்காயம் - 2
தக்காளிப்பழம்  - 2
கடுகு+உளுந்து - அரை தேக்கரண்டி
சீரகம் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
அரைத்த பச்சை மிளகாய் - 3 தேக்கரண்டி 
முந்திரி & கருப்பு உலர் திராட்சை (அல்லது) நிலக்கடலை  - தேவையான அளவு

வாசனைக்காக:
கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா - தேவையான அளவு
இலவங்க பட்டை - சிறிதளவு
உலர் ரோஜா இதழ்கள் - 5 இதழ்கள்
(பட்டை, இலவங்கம், ரோஜா இதழ் மூன்றும் சேர்த்து பிரியாணி மடிப்பு என மளிகையில் கிடைக்கும்)


ஆலிவ் எண்ணெய் / சுத்தமான தேங்காய் எண்ணெய் / கடலை எண்ணெய்

ஆலிவ் - பத்தியத்தில் இருப்பவர்கள் பயன்படுத்தலாம்
சுத்தமான தேங்காய் எண்ணெய் - கேரளத்து சுவை விரும்பிகளுக்காக.  
கடலை எண்ணெய் - சத்து மிகுந்தது; தோலுக்கு நல்லது; சுவையூட்டிக்காக பயன்படுத்தலாம்.
அல்லது
வாசனைக்காக நெய் பயன்படுத்தலாம்.



செய்முறை:

முதலில் நேந்திரம்பழத்தை இரண்டாக அரிந்து, அதை குக்கரில் போட்டு 3 விசில்கள் வரை விட வேண்டும்.

குக்கர் வேலை முடிந்ததும்...
  • வானலியில் எண்ணெ/ நெய்யை ஊற்றி, வழக்கம்போல கடுகு உளுந்தை பொறித்து, அதனுடன் வெங்காயம், தக்காளி, இஞ்சி-பூண்டு, சீரகம், நிலக்கடலை,  பச்சை மிளகாய் சாந்து, கருவேப்பிலையை வாசனை வரும்வரை நன்கு வதக்கவும்.
  • அடுப்பில் அனல் அதிகமாகவும் இல்லாமல் குறைவாகவும் இல்லாமல் நடுநிலையில் வைத்துக்கொள்ளுங்கள்.
  • வெங்காயத்தை மட்டும் முதலில் போட்டு வதக்கினால், பதார்த்தம் சுவையுடன் மட்டுமின்றி, நல்ல வாசனையுடனும் கிடைக்கும். (வெங்காயம் ஆண்மைக்கு நல்லது)
  • மேற்கூறிய அனைத்தையும் செய்த பிறகு, வதக்கலை வானலியிலே வைத்துக்கொள்ளுங்கள்.  
  • வாழையும் வதக்கலும் இரண்டரக்கலந்து செம்மஞ்சள் நிறமாக மாறும் வரை, கிளறி விடவேண்டும். 
  • இதை செய்யும்போது, அடுப்பு அனல் கதகதப்பாகவே இருக்க வேண்டும். வெப்பம் அதிகரித்தால் பதார்த்தம் அடிப்பிடித்து தீய்ந்துவிடும். 
  • கிட்டத்திட்ட பதார்த்த பதம் பஞ்சாமிர்தம் போல வந்ததும், வானலியை இறக்கவும்.


#அருண்வினோ




Sunday, 16 October 2016

சோற்றுக்குத் திறி-ரியும் தேவதைகள்!


தேநீர் கடைகளில் தூக்கிட்டுத் தொங்கும் பன் பாக்கெட்டுக்களுக்காகவும், கொல்லி வைக்கப்பட்ட தோசைக் கல்லுக்காகவும், கண்ணாடிக் கூண்டில் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட பழங்களுக்காகவும், மாடிவீட்டுப் பிள்ளையால் உயிர் உறுஞ்சி் கிடாசப்பட்ட ஐஸ் குச்சிகளுக்காகவும், கொண்டியுடன் இறுதி ஊர்வலம் செல்லும் குல்பி வண்டிகளுக்காகவும், நடமாடும் நரக ரதத்தில் நெருப்பில் வெந்துகொண்டிருக்கும் கடலைக்களுக்காகவும் அவள் எப்படி ஏங்கி உறைந்திருப்பாளோ தெரியவில்லை...
உயிர்ப்பறிக்கு உள்ளான நெல்லையும், தானியங்களையும், கொலை செய்யப்பட்ட மீனையும், கோழியையும், ஆட்டையும், ரத்தத்தை பங்குபோட்டு பீய்ச்சப்பட்ட பசும்பாலையும், எப்படித்தான் இந்த பாவி மகளால் எடுத்து சாப்பிட முடியும்? குடிக்க முடியும்?
அவைகளை பார்த்து பார்த்து மனம் வெம்பி அழுகிறாள்.
நொந்து நொடிந்து துடிக்கிறாள்.
இந்த உலகம் ஏன் அவளுக்கு சடலங்களை உணவாக அளிக்க வேண்டும்?
அவள் என்ன சுடுக்காட்டு காளியா?
அல்லது
வேட்டையாடிய உயிர்களை தின்னுவதற்கு அவள்தான் தயாராக இல்லையா?
அல்லது
அவள் தின்னுவதற்கு ஏற்றதான ஒன்றை வழங்கிட இந்த உலகம் தேடிக்கொண்டிருப்பதால்தான் அவளது தட்டில் இதுவரை ஒன்றையும் காணோமா?
என்ன இவன்(நான்) உணவுகளை அமங்களப்படுத்தி எழுதியிருக்கிறானேயென்று முகம் சுளியுங்கள்...
தயவுசெய்து என்னை வைய்யுங்கள்...
என்னை கடிந்து கொள்ளுங்கள்...
நாக்கில் பல் போடுங்கள்...
ஆனால்,
அவளது கண்ணீரின் சூட்டையும் கசப்பையும் யாரிங்கறிவாரோ?
அவளது வயிற்று தம்பிரானின் காய்தலையும், வறட்சியையும் யாரிங்கறிவாரோ?
அவளது தலைமுடியும், நகங்களும் செத்துக்கொண்டிருப்பதை யாரிங்கறிவாரோ?
பசையாகிப் போன அவளது இருதயத்தின் நீரோட்டத்தையும், அதன் பிசுபிசுப்பையும் யாரிங்கறிவாரோ?
அவரெல்லாம் சேர்ந்துவந்து
சீக்கிரம் அவளுக்கு உணவை போட்டுவிடுங்கள்!
காற்றை மட்டுமே உறுஞ்சி வாழும் அவளது ஜீவனை இப்பூவுலகில் தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு வாய்ப்பினை எடுத்துக்கொள்ளுங்கள்.
இதனூடே உங்கள் மதம் உங்களுக்கு சொர்க்கத்தில் இடம் தேடித்தரும்.
இவளை போல சோற்றுக்கு அலையும் தேவ தேவதைகளின் வயிற்றை நிரப்புங்கள்.

மரணத்தோடு முடிவதில்லை வாழ்க்கை!

3 வருடங்களுக்கு முன்பு அம்மா-அப்பா யாரிடமும் கேட்காமல் எனது உடல் உறுப்புகளை தானம் செய்துவிட்டேன். நான்கைந்து மாதங்களுக்குப் பின் வீட்டிற்கு எனக்கான உறுப்பு தான அடையாள அட்டை வந்தபோதுதான் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். 7 வருடம் தவமிருந்து பெற்ற பிள்ளை உறுப்புக்களை ஊருக்கு தானம் கொடுத்துள்ளதே என உளமெங்கும் குமுறல்கள். முன்பெல்லாம் ரத்த தானம் பற்றி பேசும்போது கூட அப்பாவிற்கு தலையில் கொம்பு முளைக்கும் அளவிற்கு கோபம் வரும். அம்மா கண் கலங்கி நிற்பாள். இந்நிலையில் எல்லாவற்றையும் முடித்துக்கொண்டே வந்துவிட்டேன் என தெரிந்ததும் இப்படிப்பட்ட திட்டுதான் என்றில்லை. இடையே குரல்கள் நடுங்க, கண்கள் மிளிர, வாய் குளற பெத்த பாசத்தை இருவரும் மாறி மாறி என் முன்னே கொட்டி வைத்தனர். 
கண்ணீரும் கவலையுமாய் வெள​​வெளத்துப் போய் நின்று கொண்டிருந்தேன். ஆனாலும் மனம் திடகாத்தியமாகத்தான் இருந்தது. 
அவர்களின் விசும்பல்களுக்கு பின், பொறுமையாக அம்மாவிடம் பேசினேன். அம்மாவின் மடியில் தலை வைத்து அன்று எனக்குத் தெரிந்த உயிர்-உடல்-வாழ்க்கை-மனிதம் என சில தலைப்புக்களை ஆற்றிக் கொண்டிருந்தேன். அப்பா தன் மீசை சோர்ந்துபோகும் அளவிற்கு என் பேச்சை வெறிக்க வெறிக்க கேட்டுக்கொண்டிருந்தார். சில நிமிடங்களிலேயே அம்மாவின் முகத்தில் பெருமிதம் கலந்த சிரிப்பு தெரிந்தது. அம்மா புரிந்துகொண்டார். ஆனால் அப்பா புரிந்துகொண்டாலும் ஏற்றுக்கொள்ளவில்லை.

கடந்த தீபாவளிக்கு ஊருக்குச் சென்றபோது இருவரும் என்னிடம் கேட்டுக்கொண்டனர்; "நாங்களும் உடலுறுப்பு தானம் பண்ணலாம்ன்னு இருக்கோம் கண்ணு".
அவர்களது தான முறைமைகளை வழிநடத்தியப் பின் வழக்கம்போல் என் மண்டைக்குப் பின் சக்கரம் சுழன்றது.
அடேய் அருண் வினோ... உன் குடும்பத்தை வெற்றிகரமா சீர்திருத்திட்ட டா... என!!

உடலுறுப்புகளையும், உதிரத்தையும் தானமாகக் கொடுப்பது மதக் கோட்பாடுகளை மீறிய செயல் என்ற காலம் போய், இன்று வாழும்போதே மனிதன் குருதிக்கொடையளிக்கிறான். இறந்த பின்னர் கண்களை கொடைளிக்கிறான். இன்றைக்கு உடல் உறுப்புகளையும் கொடையாக வழங்கக்கூடிய அளவிற்கு வாழ்வியல், மனிதவியல் பக்குவங்களை அடைந்துள்ளான்.
இன்று உடல் உறுப்பு தானம் என்பது உணர்வுப்பூர்வமானதொரு தியாகமென எண்ணும் அளவிற்கு இளைஞர்கள் பக்குவப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக தமிழகம் தான் உடல் உறுப்புக்களை தானமளிப்பதில் முதலிடம் வகிக்கிறது என்பது பெருமிதப்படக்கூடிய விடயம்.

காரணம் ஹிதேந்திரன் என்ற தனி நபர். 2008ல் சென்னையில் நடந்த ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தவர்தான் ஹிதேந்திரன். டாக்டர் தம்பதியினர் அசோகன் - புஷ்பாஞ்சலி அவர்களின் மூத்தமகன். 
விபத்தில் குருதியையும் உயிரையும் இழந்து கிடந்த தங்கள் மகனை வெற்றுடலாய் எண்ணி எண்ணி அழுதிடாமல், அவனை மீண்டும் உயிர்ப்பிக்க துடித்தனர். ஆம்...அவனது அனைத்து உறுப்புகளையும் தானமாக அளிக்க சற்றும் தயக்கமின்றி முன்வந்தனர். மருத்துவத் துறையினரோடு காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளும் கை கோக்க, இந்த தானம் மிகத் துரிதமாக யாருக்குத் தேவையோ அவர்களைச் சென்றடைந்தது.
ஊடகங்கள் இதைப் பெரிய அளவில் எழுத, தமிழகத்தில் உடலுறுப்பு தானம் பற்றிய மிகப் பெரிய விழிப்புணர்வு பரவியது. இதன் தொடர்ச்சியாக, மூளைச்சாவு உடல் உறுப்பு மாற்றுத் திட்டம் தொடங்கப்பட்டது. மரணிக்கும் பெருமகன்கள் இத்திட்டத்தின் கீழ் இன்று பல உயிர்களுக்கு மரணமில்லா பெருவாழ்வை நல்கி வருகின்றனர்.
2008 அக்டோபர் முதல் 2015 மே மாதம் வரை மூளைச்சாவு அடைந்த 528 ஆண்கள், 121 பெண்கள் என மொத்தம் 649 பேரின் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டுள்ளன. இவர்களிடமிருந்து மொத்தம் 3,572 உறுப்புகள் தானம் பெறப்பட்டுள்ளன.
இது தவிர வாழ்ந்து கொண்டிருக்கும் பலரும் தங்களது உடலுறுப்புகளை தானம் செய்து வருகின்றனர்.

விரைவில் நீங்களும் செய்து விடுங்கள்....!
ஆக்கம்: அருண்வினோ
TamilNadu Network for Organ Sharing: 

Tuesday, 27 September 2016

தாராவி நாகரீகம்!

அன்புக்குரிய நண்பர்களே,
இன்றுடன் ஊடகத் துறையில் எனது ஆயிரமாவது பணி நாளை நிறைவு செய்கிறேன். வாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. எனது தொழிலை முதன் முதலாக மும்பையிலிருந்துதான் தொடங்கினேன். அங்கு பணியாற்றிய 365 நாட்களில், கிடைத்த அனுபவங்கள் சில நூறு இருந்தாலும், இப்பதிவில் அவற்றை பற்றி பதிவு செய்யவில்லை. மாறாக, தாராவி என்ற சிறு பகுதியில் வசிக்கும் தமிழர்கள், கலப்பினத்தவர் மற்றும் அவர்கள் கட்டமைத்த நாகரீகம் பற்றிய சில தகவல்களை பதிவு செய்துள்ளேன். ''என்னடா இது இவன் நாகரீகம் என்று எதையோ சொல்கிறானே'' என்கிறீர்களா? இக்கட்டுரையை படித்துப் பாருங்கள்......




உலகின் மிகப்பெரிய நகர்ப்புற திரட்சிகளில் உலகின் நான்காவது மிகப்பெரிய நகர திரட்சி என்ற அந்தஸ்துடன் தலை நிமிர்ந்து நிற்கிறது மும்பை பெருநகரம். மராட்டிய மண்ணின் ஒட்டுமொத்த உயிரோட்டத்தின் பிடிப்புடன்,கொங்கன் கடற்கரையில் துடிப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது இந்த வர்த்தக நகரம். 
படோடபம், ஆர்ப்பாட்டம், அலம்பல், அட்டகாசம் என பந்தாவுக்கு என்னென்ன மறுபெயர்கள் இருக்கிறதோ அத்தனையும் மும்பைக்கு பொருந்தும். அதே நேரத்தில் நேர்த்தி, இயல்பு, சகிப்புத்தன்மை, நிதானம், உழைப்பு என அத்தனை நல்ல விடயங்களும் கூட பொருந்தும். 9 ஆயிரம் கோடிக்கு அம்பானி கட்டிய வீட்டையும், ஏழைகளின் சாலையோர அடுப்புகளையும், ராட்சத குழாய்க்குள் குடும்பம் நடத்தும் மனிதர்களையும் இங்கேதான் காண முடியும். பிரமாண்ட கட்டிட கோபுரங்களின் இடைவெளிகளுக்குள் இருந்து பார்க்கையில், தார் அட்டை போடப்பட்ட குடிசைளும் தன் அழகையும் அமைதியையும் போட்டிக்குப் போட்டியாக ஈடுகட்டிக்கொண்டிருக்கும். வீடுகளின் சுவர்களை ஒட்டியவாறே நகரின் முக்கிய சாக்கடை கால்வாய்கள் சத்தமின்றி ஓடி, அரபிக்கடலில் சங்கமித்துக்கொண்டிருக்கும். இணைப்பில் உள்ள செயற்கைக்கோள் படத்தை பார்த்தாலே உங்களுக்குப் புரிந்துவிடும். சிவப்பு நிற கோட்டிற்குள் இருக்கும் பகுதிதான் தாராவி. அங்குள்ள கட்டிட மேற்கூரைகளை பாருங்கள். சிவப்புக் கோட்டிற்கும் வெளிப்பக்கம் உள்ள கட்டிட மேற்கூரைகளை பாருங்கள்.

உலகின் மிகப்பெரிய நகர்ப்புற திரட்சி நகரம் மும்பை என்பதை போல, நகரின் இரத்த நரம்புகளை இழுத்துப்பிடித்த இதயமாக அமைந்திருக்கும் தாராவி, உலகின் இரண்டாவது மிகப்பெரிய குடிசைப்பகுதி என பட்டம் சூட்டப்பட்ட பகுதி ஆகும். கடற்கரையில் மாகிம். அதற்கடுத்ததாய் முழுக்க முழுக்க குடிசைகள் நிரம்பிய பகுதி தாராவி. அங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள்தான். குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்தான் அதிகம்.
ஆதி காலத்து தாராவி ஒரு வித மயான சூழலை கொண்டிருந்த இடம். பின்னர் பம்பாய் தோல் தொழிற்சாலையின் வேலை வாய்ப்புகளுக்காக தமிழர்கள் இங்கு படையெடுத்துள்ளனர். நாலு கால் குச்சி நட்டு, அதில் சாக்கு கட்டிக்கொண்டு வாழ்ந்துள்ளனர் மக்கள். பம்பாயில் தொழிற்சாலைகள் ஒன்றன்பின் ஒன்றாக அசுரத்தனமாக முளைக்கத் தொடங்கியபோது. ஏராளமான தமிழர்களும் தெலுங்கர்களும் புலம்பெயர்ந்து வந்து குடியேறினர். தாராவி வடிவம் பெற தொடங்கியது. குடில் வீடுகள் சில ஆண்டுகளுக்கு பின்னர் தார் அட்டை போர்த்தப்பட்ட பாதுகாப்பான ‘ஒட்டு வீடு’களாக மாறின. நூறிலிருந்து ஆயிரம் வரையும், ஆயிரத்திலிருந்து பல்லாயிரம் வரையுமாக வீடுகளின் எண்ணிக்கை பெருகியது. இன்று அங்கு ஆறு இலட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். 


மக்கள் வளம் பெருக பெருக அரசியல்வாதிகள் நுழைந்தார்கள். தமிழர்களின் ஆளுமையால் அங்கு அரசியல் கொடிகட்டி பறக்கிறது. அப்பகுதியில் போட்டியிடும் ஒவ்வொரு மராட்டிய அரசியல்வாதிகளுக்கும் அங்குள்ள ஒவ்வொரு தமிழன், தமிழச்சியுடைய முக்கியத்துவமும் தேவைப்படுகிறது. வாக்கு பெறும்வரை. வீர சிவாஜியின் அரசியல் தத்துவங்களை கரைத்துக் குடித்துவிட்டு வந்து, மேடைகளில் பேசி அரங்கம் அதிரும் கைத்தட்டல்களையும், விசில்களையும் பரிசாக பெற்றுச்செல்கிறார்கள். தேர்தல் காலத்தில் பார்க்க வேண்டும், அந்த மேடை நாடகங்களை. 
இருப்பதோ நான்கைந்து பேர்; தாயக்கட்டைகள் போல் உருண்டு உருண்டு அவர்களுள் ஒருவர் தாராவியை கைப்பற்றினாலும், அந்த அரசியல்வாதிகளால் உரிய நேரத்தில், உரிய இடத்தில் தாராவியும் அதன் பிள்ளைகளும் பேசப்படுவதில்லை. 
எனது கண்ணோட்டத்தின் ஊடாகவும், சில அனுபவஸ்தர்களின் டீக்கடை விவாதங்களாலும் ஒன்றே ஒன்றை மட்டும் நன்கு தெரிந்துகொண்டேன். 
தாராவி என்பது அரசுக்களால் கட்டமைக்கப்பட்டு, வளர்த்தப்பட்ட இடம் அல்ல; முழுக்க முழுக்க மக்கள் சக்தியாலும், அவர்களின் உழைப்பாலும் கட்டமைக்கப்பட்ட இடம் . அப்பகுதியின் மக்கள் தொகை பெருகத் தொடங்கியபோது, அடைப்படை வாழ்வியலை பூர்த்தி செய்வதற்கான சில தொழில்கள் தொடங்கப்பட்டன. பலர் தொழிற்சாலை வேலைகளிலிருந்து விடுதலை அடைந்து, தங்களுடைய திறமைகளையும், உழைப்பையும் முதலீடாக போட்டு, சொந்த தொழில் தளங்களை நிறுவிக்கொண்டனர். அரசியல் தொடர்புகளின் மூலம் மின்சாரம் கொண்டுவரப்பட்டது. அதன் பிறகுதான் வளர்ச்சி தன் புரட்சியை பட்டி தொட்டியெங்கிற்கும் கொண்டு சேர்க்க ஆயத்தமானது. பல்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு வகையான சிறு, குறு, குடிசைத் தொழில்கள் ஆரம்பிக்கப்பட்டன. தாராவியின் பொருளாதாரம் அதன் குடிமக்களின் வீடுகளுக்குள் இருந்து தொடங்கியது. குடிசைத் தொழிலில் பிஸ்கட் தயாரிப்பு, மட்கலம், விளக்குகள், பானை, அப்பளம், வடகங்கள், கைவினைப் பொருட்கள், நொறுவல் தீனிகள், ஊறுகாய், மர வேலை, இனிப்பகம், உணவகம், பை தயாரிப்பு, ஆடை தயாரிப்பு, தோல் காலணிகள் தயாரிப்பு, நெய்தல் என தொழில்கள் முளைக்க முளைக்க, இப்பகுதியின் பொருளாதாரம் வீறிட்டு வளரத்தொடங்கியது. தொழிலில் லாபமடைந்தவர்களால் கல்விச் சாலைகள் தொடங்கப்பட்டன. மக்கள் தீவாக கிடந்த பகுதியை நகரின் முக்கிய பகுதிகளுடன் இணைத்து வைத்தன சாலைகள். வழித்தடங்கள் அமைந்தன. போக்குவரத்து அம்சங்களை பெற்றது தாராவி. அதனுடன் சயான் ரயில் நிலையம் அமையப்பெற்றதுதான் பொருளாதாரத் தூண்டலுக்கான அடுத்தக்கட்ட நகர்வாக அமைந்தது. படிப்படியான வளர்ச்சிக்கிடையே அரசியல்வாதிகளின் கண்களுக்கு தாராவி தங்கச் சுரங்கமாக மிளிர்ந்து கொண்டிருந்தது. பிரபல வங்கிகளின் கிளைகள் மாநிலம் விட்டு மாநிலம், ஊர் விட்டு ஊர் என படையெடுத்து வந்துள்ளன. மும்பை நகரின் பொருளாதார அரசியலுக்கான அடிப்படை பங்கீட்டை தாராவி வழங்கிக்கொண்டிருக்கிறது என்றால் மிகையாகாது. ஆம், தாராவி இப்போது குடிசைத் தொழில்களின் முடிசூடா ராணி.


பொருளாதாரம் வளர்ந்தாலே நாகரீகம் தானாக வளரும் என்பது கோட்பாடு. தாராவியில் இன்று பொருளாதாரம் வளர்கிறது; நாகரீகமும் வளர்கிறது. பழைய ஒட்டு வீடுகள் மறைந்து ஆங்காங்கே தனியார் அப்பார்ட்மெண்ட்கள் எழுந்துள்ளன. ஆங்காங்கே கட்டமைப்பு வசதிகள் எழும்பத் தொடங்கியுள்ளன. அரசு கட்டிக்கொடுத்த குடியிருப்புக் கட்டிடங்கள் வெகு சொற்பம் என்றாலும், மக்கள் சக்தியால் எழுப்பப்படும் கட்டிடங்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவது மகிழ்ச்சியே. எனினும் சில பகுதிகளில் குடிநீர், மின்சாரம், கழிப்பிடம், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை விடயங்களில் நிறைவின்மை நிலவுகிறது. மக்கள் தமிழ் நாளேடுகளுக்கு வியர்க்க விறுவிறுக்க, குரல் நடுங்க புகார்களை இறைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். அங்கு இரண்டே தமிழ் நாளேடுகள்தான்; தினகரனும், தினத்தந்தியும். பதினான்கு லட்ச குடியிருப்பு வாசிகளின் அபயக்குரலும், கோரிக்கைகளும், அவர்களுக்கான தகவல்களும் இந்த இரண்டு நாளேடுகள் வழியாகக் கேட்டால்தான் உண்டு. மராட்டிய ஏடுகளில் உள்ளூர் பக்கங்களின் ஏதோ ஒரு மூலையில் கொட்டியும் கொட்டப்படாமலும் கிடக்கும் அச்செய்திகள். 
அரசியல்வாதிகள் ஒன்றே ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். உங்களிடம் பொதுமக்கள் வானளாவிய கட்டிடங்களை கேட்பதில்லை. சராசரி வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மட்டும்தான் கோருகிறார்கள். அதை முழுதாக நிறைவேற்றுவதற்குள் உங்கள் வீடுகளுக்குள் பணம் புகுந்து விளையாடிவிடுகிறது. மாநில அரசாங்கம் விளாவரியாக கண் கொடுக்கும் வரை இந்த விளையாட்டுகள் ஓயப்போவதில்லை. அவை விரைவில் ஓய்க்கப்படவேண்டும். இருந்தாலும் மக்கள் தங்கள் வீட்டுப் பொருளாதாரத்தை பாதுகாப்பதற்காக தங்களுடைய தொழில்களை ஒயாமல் இயக்கிக்கொண்டிருக்கின்றனர்.

தாராவி பற்றி பேசினால், இன்னும் எவ்வளவோ பேசலாம், விவரிக்கலாம். சமுதாய கட்டமைப்புகள், அரசியல் அமைப்புகள், கல்விச் சூழல் என ஒவ்வொரு அங்கத்திலும் சுமார் நூறு நூறு பக்கங்கள் எழுதலாம். ஆனால் இந்த கட்டுரையை படிக்க உங்களுக்கு நேரம் வேண்டும் அல்லவா? ஆக, பின்னாளில் என் கபாலத்துக்குள் கிடக்கும் அறிவானது, புத்தகம் இயற்றும் அளவிற்கு பக்குவப்படும்போது, எனது எழுத்துக்களை தாராவிக்கென அர்ப்பணித்து ஒரு புத்தகம் இயற்றுவேன். ஏனென்றால் எனது தொழில் ரீதியான வளர்ச்சிக்கு முதல் அஸ்திவாரம் தாராவியிலிருந்து போடப்பட்டது ஆகும். அங்கிருந்துதான் எனது கருத்தோட்டங்களும், எழுத்தோட்டங்களும் துளிர்விட்டு ஓடத்தொடங்கின. அங்கேதான் எனது கண்ணோட்டம் சீரமைக்கப்பட்டது. எளிமையையும், உழைப்பையும் கற்றுக்கொண்ட இடம் அதுதான். கூண்டிலடைத்த கிளியாய் வீட்டுக்குள் முடங்கியிருந்த எனக்கு, சாமானியர்களுடனான உறவை ஏற்படுத்திக் கொடுத்து, முழு சுதந்திரத்தை உணரவைத்த பெருநகரின் சிறு அங்கம் அது. பேனாக்கள் மீண்டும் என் உள்ளங்கைக்குள் அரங்கேற்றப்பட்ட பீடமும் அதுவே. அங்கே என் எழுத்துக்களுக்கு முதன்முதலில் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்டது. தாராவியின் சாலைகளிலும், சந்துகளிலும் தார்மீக உறவுடன் சுற்றித்திரிந்த அந்த ஒரு வருட கால அனுபவத்தை மீண்டும் பெறுவதற்கு தயாராகவே இருக்கிறேன்.

தொழில் நிர்வாகவியல் படித்திருந்தாலும், பத்திரிக்கை துறையின்மீது கொண்டுள்ள ஆர்வத்தை புரிந்துகொண்டு, முதல் பணி வாய்ப்பினை வழங்கிய மும்பை தினகரன் நிர்வாகத்திற்கும், ஆசிரியர் அவர்களுக்கும், துணை ஆசிரியர்கள், பக்க கட்டமைப்பாளர்கள் மற்றும் என்னுடன் பணியாற்றிய செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் என அனைவருக்கும் எனது கடமையுணர்வு நிறைந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன்.

ஆக்கம்: #அருண்வினோ
புகைப்படங்கள்: #Google

Sunday, 14 August 2016

''வேடிக்கை பார்ப்பவன்''

திரையில் முகம் காட்டாத
இந்த ''பட்டாம்பூச்சி விற்பவன்'' மீது
எவ்வளவு காதல்...!!! எவ்வளவு காதல்...!!!
தன்னுடனான காதலை
மாந்தனின் மனதில்
சொந்தமின்றி பந்தமின்றி
பாட்டலே விதைத்துவிட்டான்...!!
ஃபேஸ்புக் மகா சமுத்திரத்தில்
அகம், புறம், இடம், வலம்
எங்கு செல்லினும்
இவனது பட்டாம்பூச்சிகள் இட்ட
கண்ணீர்துளிகளின் வாடைதான்...!!
நானொன்றும்
கூனவில்லை குருகவில்லை.
கண்ணீரும் சிந்தவில்லை - கதறியழ
யார் மடியும் தேடவில்லை...!!
இவனது எழுத்துக்களை
அள்ளிக்கொண்டு - அதை
ஊரெங்கும் தூவிக்கொண்டு
ஆத்மாவை தேடித்திரியும்
அந்த பட்டாம்பூச்சிகளை
வெறுமனே ''வேடிக்கை பார்ப்பவன்'' ஆகி நிற்கிறேன்
விழிகளிலிருந்து வெளியேறி...!!


[பி.கு:- எங்கு பார்த்தாலும் ஒரே இரங்கற்பாவாகவும், கத்தல் கதறலாகவும் இருக்கிறது. கடந்த 10 நாட்களில் தமிழ்த் திரையுலகம் இழந்த ஜம்பாவான்களுள் கவிஞர் நா. முத்துக்குமாருக்கு சமர்ப்பிக்கப்படும் சோகத்தின் அழுத்தமே என்னை இவ்வாறு எழுத வைத்துவிட்டது. அன்னாருக்கு எனது அஞ்சலி]

Sunday, 10 July 2016

எனது கண்ணோட்டத்தில் 'சிவன்'!


இந்த பித்தனுக்கென
இன்ன இடமுமில்லை, குணமுமில்லை.
சடையை வரிந்துக்கட்டியும்
சில நேரங்களில் அவிழ்த்து பறக்கவிட்டும் திரிவான்...!! 
கபாலத்தை ஏந்திக்கொண்டு பிச்சையெடுக்கவும் ஓடுவான்...!!
ஓடியாடும் அரவங்களை அங்கத்தில் கட்டிக்கொண்டும் வித்தையாடுவான்...!!
புலிகளை வேட்டையாடி தோல் படுக்கையும் நெய்வான்...
கிறுக்கன்; பிணச் சாம்பலை பூசிக்கொண்டும் கூத்தாடுவான் ...!!
இவனால் பித்தான சித்தனுக்கும் மீளா அடிமையாவான்...!!
தமிழ்ப் பாட்டுக்கும், புட்டுக்கும் எச்சில் ஒழுக்குவான்...
நிலாவைக் கிள்ளி பூவாய் பின்னிக்கொண்டு, அதற்கு தண்ணீரும் ஊற்றுவான்...!!
நான் மட்டுமல்ல, 

இவனை உயிரொடு கொண்ட தொண்டன் எவனும் எவ்வாறினும் வசைக்கலாம்.
கொஞ்சம் கூட வஞ்சிக்கமாட்டான்.
புண்முறுவல்தான் பூப்பான்.
என் உயிரறையின் நிசப்தத்தையும் காதலையும் அள்ளியள்ளிப் பருகினாலும், விடாபிடியாக குழாயிட்டு உறுஞ்சினாலும், நாளையும் மாவேட்கையாளன் ஆவான் இந்த அடங்காப்பிடாரன்.
இன்னும் எதைக் கொடுத்து இவனது தாகம் தணிப்பேன்....?
ஆங்...
கண்ணப்பனை போல தடித்த பித்தனென்றால் இவனுக்கு அலாதியான பிரியம்.
கல்லுக்குள் புகுந்திருந்து கண்ணைக் கூட கேட்டு வாங்கிவிடுவான் கள்ளன்.
என் உயிரையே ஆட்கொள்பவனுக்கு
கண்ணையா கொள்ள முடியாமல் போய்விடும்?
உள்ளேயே குதித்துவிட்டான்.
விழி-படல்-நரம்பென அனைத்தையும் இறுக்கிப்பிடித்து,
கண்-நீரைப் பிழிந்து சுவையாடிக் களிக்கிறான். 
நானும் கொடுத்துக்கொண்டே இருக்கிறேன்.
நாளையும்.... நாளும்....!!

‪#‎அருண்வினோ‬

Tuesday, 5 July 2016

விரல்கள் கதறுகின்றன‬!


தலைநகரில் அன்று நடந்திருந்த ஐந்தாறு கொலைகளில், வெட்டவெளியில் நிகழ்ந்த மிக பயங்கரமானதொரு கொலைக்கு ஊடகங்கள் முரசறையும் சத்தம் கேட்டு, திடுக்கிட்டெழுந்து அடுப்படியிலிருந்து தெறித்தோடி வந்த பூனைக்குட்டியாய் ஃபேஸ்புக்கில் ஆஜர் ஆனான் தமிழன். சம்பவத்தின் செய்திகளையும், கட்டுரைகளையும், பெண்ணியத்தையும், உடன் தன்னிலை விளக்கத்தையும், விரல் நுனிகள் கதற கதற கணத்திற்குக் கணம் பதிவேற்றி பகிர்ந்து போராடிப் பார்த்திருக்கிறான். திரும்பும் பக்கமெங்கும் அவனது எழுத்துக்களிடும் ஓல சப்தங்களைக் கேட்டு சுவாதியின் ஆத்மாவும் கூட கத்திக் கதறியிருக்கலாம் என ஊகிக்கிறேன். கொலையாளன் கைது செய்யப்பட்ட பின்புதானே இவனது வேகதாபம் சற்று குறைந்துள்ளது!
இறுதியில்... சீரழிந்து கிடக்கும் இந்த நோஞ்சான் சமூகத்தின் மீதான தன் வெறுப்புணர்வை உமிழ்வதை உணர்த்தும் வகையில் 'அடுத்த சுவாதிக்காக காத்திருக்கலாம்' என அறிவிப்புப் பலகையை சொறுகி வைத்துவிட்டு தற்காலிகமாக கடையை சாத்தியுள்ளான்.
ஆக, எந்நேரத்திலும் வீட்டுக்குளிருந்தே தனது குறைந்தபட்ச போராட்ட பங்களிப்பை அளித்திட அவனது விரல் நுனியும், போராட்டத் திடலாக மாறிட மொபைலும், போர்க்கருவிகளை இறக்குமதி செய்திட டேட்டாவும் தெம்புணர்வுடன் தயாராகவே இருக்கின்றன. வெளியாகும் முடிவுகளுக்கு அழுகவும் கோபப்படவும் கூட அந்த ஸ்மைலீஸ்கள் வரிசையின் ஒரு மூலையில் காத்துக்கிடக்கின்றன.
‪#‎அருண்வினோ‬