Wednesday, 16 December 2015

மார்கழித் திங்கள் சிறப்புப்பதிவு: "கோதை ஆண்டாள் தமிழை ஆண்டாள்"!

ஆண்டாள் தமிழத்தில் 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆழ்வார்களுள் ஒருவர். வைணவம் போற்றும் 12 ஆழ்வார்களில் இவர் ஒருவரே பெண்ணாவார். தனது 15ஆம் வயதில் கிருட்டிணனுடன் இரண்டறக் கலப்பதற்கு முன் திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் இரண்டு நூல்களை இயற்றியுள்ளார்.
திருப்பாவை: 30 பாடல்களைக் கொண்டுள்ளது. இத்திருப்பாவையில் ஆண்டாள் தன்னை ஆயர்பாடியில் வாழும் கோபிகையாக நினைத்துக் கொண்டு பாடப்பெற்ற பாட்டுகளின் தொகுப்பாகும்.
நாச்சியார் திருமொழி: 143 பாடல்களைக் கொண்டுள்ளது. இறைவனை நினைத்துருகிப்பாடும் காதல்ரசம் மிகு பாடல்களின் தொகுப்பாக காணப்படுகின்றது.
வைணவ சமய நூல்கள் கூறும் இவரது வரலாறு, இறைவன் மீது இவர் கொண்டிருந்த காதலை விளக்கும் வித்தியாசமான ஒரு வரலாறாகும்.
கடவுளுக்காக தன்னை அர்ப்பணித்த பெண்கள் சரித்திரத்தில் பலரில் ஆண்டாள் முன்னோடி என்றே கூறலாம். பெண்களில் சிலருக்கு இளமை, அழகு போன்றவை ஒரு சுமையாக உபத்திரவமாக இருந்திருக்கிறது. மனிதர்களைக் கல்யாணம் செய்வதும் பிள்ளை பெறுவதும் பிடிக்காமல் தெய்வத்தை நாடும் ஒரு விதமான மனப்பாங்கு எல்லா நூற்றாண்டுகளிலும் சில பெண்களுக்கு இருந்து வந்திருக்கிறது.
     

ஆண்டாளைப்பற்றி யோசிக்கும்போது அவளை ஒரு அறியாப் பெண்ணாக, நாராயணனையே நினைந்து அவனுக்கு வாழ்க்கைப்பட பிடிவாதம் செய்யும் பெண்ணாக மட்டும் நினைக்க இயலவில்லை. அவர் பாடல்களிலுள்ள தேர்ந்த புலமையும் திறமையும் பிரமிக்க வைக்கின்றன. திருப்பாவை மிகக் கடினமான ‘இயற்றர விணை கொச்சகக் கலிப்பா’ வகையைச் சேர்ந்தது.
அவர் பாடல்களில் உள்ள நுட்பமான பழக்கவழக்கங்கள், நுட்பமான இயற்கை வருணனைகள் எல்லாவற்றையும் நோக்கும்போது ஆண்டாளை ஒரு அறியாச்சிறுமியாக எண்ணுவதில் சிரமமிருக்கிறது. 

ஆழ்வார்கள் காலத்தில் ஜ ஷ ஸ ஹ போன்ற கிரந்த எழுத்துகள் தமிழுக்கு வரவில்லை. சமஸ்க்ருத வார்த்தைகளை அவர்கள் அழகாக தமிழ்ப்படுத்தினார்கள். கிரந்த எழுத்துகள் இல்லாவிடினும் அழகான தமிழ் எழுத முடியுமென்பதற்கு ஆழ்வார் பாடல்களும் கம்பனும் உதாரணங்கள்.
மிக விசேடமாக...ஆண்டாளின் நான்காவது திருப்பாவையில் ஓர் அற்புதமான மழைக்காட்சியும் விஞ்ஞானக் குறிப்பும் உள்ளது. மழை எப்படிப் பெய்கிறது என்று ஆண்டாள் விவரிப்பதை இன்றைய வானிலை நிபுணர்கள் அப்படியே ஏற்றுக் கொள்வார்கள். மழை எப்படிப் பெய்கிறது என்பதற்கு ஆண்டாள் இரண்டுவிதமான படிமங்களைப் பயன்படுத்துவது அவரது கவிதைத் திறமையைக் காட்டுகிறது. ஒரு படிமம் திருமாலின் கரிய உடல் சங்கு சக்கரம் இவைகளோடு மழையை ஒப்பிட மற்றதில் மழை பெய்வதின் இயற்கையான விளக்கத்தைத் தப்பில்லாமல் தருகிறார். அந்த ஒன்பதாம் நூற்றாண்டில் ஆண்டாளுக்குத் இது தெரிந்திருந்தது விந்தையே.


திருப்பாவை முப்பது பாடல்களையும் நோக்கும்போது ஆண்டாள் பெரும்பாலும் தன் தோழிகளையும் கண்ணனின் உறவினர்களையும், இறுதியில் கண்ணனையும் துயிலெழுப்புகிறார். ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து ஒரு பெண் தன் தோழிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, நீங்கள் வெறும் போகப் பொருள்களல்ல; பகவானையே எழுப்பி நீங்கள் விரும்பும் பறையைக் கேட்கலாம். புறத்தூய்மையாலும் அகத்தூய்மையாலும் அவனை அடைய உங்களால் முடியும் என்ற புது நோக்கில் எழுதிய அந்த இளம் பெண் நூற்றாண்டுகள் கடந்தும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறாள்.


தொகுப்பு: அருண்வினோ


(இக்கட்டுரை பல்வேறு தளங்களில் இருந்து ஒருங்கே தொகுக்கப்பட்டது ஆகும்)


No comments:

Post a Comment