Thursday, 26 May 2016

ஆக்கப்பூர்வமானதாக மாறுகிறதா தமிழக சட்டசபை?


கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சி சட்டமன்ற அரங்கில் அங்கம் வகித்த லட்சணத்தை டெல்லி ஊடகங்கள் வரை நீவி நெட்டிமுறித்தன. செய்வதறியாது குழம்பும் தலைமையையும், தலைமையறியாது பிதற்றும் அன்பர்களையும் சுமந்துகொண்டு யாரோ ஏற்றிவைத்த பொதியை சுமந்துக்கொண்டு எங்கேயோ போகும் கழுதைப்போக்காய் சென்றுகொண்டிருந்தது சட்டசபை. நாக்கைச் சுழற்றி விரலை உயர்த்தி, முதல்வர் இருக்கையுடன் கியான் கியான் தாம்பூலம் விளையாடிக்கொண்டிருந்த எதிர்க்கட்சியாளரின் காரை பல நாட்களுக்கு சாலைகளிலும் கூட பார்க்க இயலாமல் போனது. இந்த சாகச விளையாடலின் தடயங்களைக் கொண்டு மீம்ஸ் போட்டு விளையாண்டு களித்தான் தமிழன். இந்த பொழுதுபோக்குக்காவது பிரயோஜனப்பட்டது பாருங்கள் அந்த எதிர்க்கட்சி என்று சற்று ஆறுதல் அடைந்துகொள்ளலாம்.
ஆனால் இந்த 2016ன் புத்தாட்சியில் பலம் வாய்ந்ததொரு எதிர்க்கட்சி உருவாகியுள்ளது. சபையில் அது கேட்கும் கேள்விகளுக்கு, போராடியாவது பதில் அளித்தே தீரவேண்டும் என்ற நிர்பந்தத்தில் இருத்திவைக்கப்பட்டுள்ளது முதல்வர் இருக்கை.
யாரும் தற்சமயம் எதிர்பார்க்காததொரு ஆரோக்கியமான ஆரம்பத்தினை கண்டுள்ளது சபை.
ஆள்வோர் ராஜபாகையை சூடியாண்டாலும், பிரச்சினைகளையும், குற்றங்களையும் அஞ்சாமல் முன்னெடுத்துவைத்து களையும் திறமையுடன் இப்படியொரு எதிரணி அமைய, இத்தனைக் காலம் தேவைப்பட்டுள்ளது தமிழ்நாட்டிற்கு.
இரும்பு மனுஷிக்கும் தளபதிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு, இப்போது ஏற்பட்டுள்ள ஆரோக்கியப்போக்கையும், ஆக்கப்பூர்வத்தையும் ஐந்தாண்டு இறுதிவரைக்கும் கடைபிடிக்குமாறு கோரிக்கை வைக்கும் டீக்கடை 'பெஞ்ச்'களுடன் ‪#‎அருண்வினோ‬.
வாழ்க அரசியல்...! வளர்க தமிழகம்!...

No comments:

Post a Comment