நம்மை ஆளும் தலைவர்கள்
புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு கலைஞர் கொடுத்த பேட்டியில், இலவசங்கள் பற்றிய ஒரு கேள்வி அவரிடம் கேட்கப்பட்டது. அதில் பதில் சொன்ன கலைஞர், “இலவசத்தை திமுக அணுகுகிற முறை வேறு, அதிமுக அணுகுகிற முறை வேறு” என்று சொன்னார். அதிமுகவின் இலவசம் ஆட்சியாளர்களின் சுயநலத்தை மையப்படுத்தியது, ஆனால், திமுகவின் இலவசமோ மக்கள்நலனை மையப்படுத்தியது என்று விளக்கமாக நாம் புரிந்துகொள்ளலாம்! இது ரொம்ப நுட்பமானச் செய்தி! கொஞ்சம் ஆழமாக பார்க்க வேண்டும்.
மேலைநாட்டு அரசியல் ஆய்வாளர் Andrew Wyatt என்பவர் தமிழ்நாட்டு அரசியலைப் பற்றி ஓர் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதியுள்ளார். அதில் Populism(ஜனரஞ்சகவாதம்) என்பதை பற்றி குறிப்பிட்டுள்ளார். அதாவது, ஏதேனும் ஒருவகையான ஜனரஞ்சகவாதத்தின் மூலமாகத்தான் வெகுமக்களை தங்கள் அரசியல் கட்சியை நோக்கி தலைவர்கள் கவர்ந்திழுக்க முடியும். அதற்கு திமுக பயன்படுத்திய Populism என்பது என்ன? அதிமுக கையாண்ட Populism என்பது என்ன? என்று விரிவாகப் பேசுகிறது அந்த கட்டுரை!
அதாவது, திமுகவின் ஜனரஞ்சகவாதத்தை Empowerment Populism அல்லது Assertive Populism என்றும், அதிமுக கையாண்டதை Paternalist அல்லது Protection Populism என்றும் ஆராய்ச்சியாளர்கள் வகைப்படுத்துகிறார்கள்.
Empowermnet / Assertive Populism என்பது மக்களின் மேம்பாட்டை, மக்களின் உரிமையை வலியுறுத்துவது. Paternalist / Protection என்பது மக்களுக்கு உரிமைகளையும் பொறுப்புகளையும் அளிக்காமல், அவர்களுக்கு வெறும் இலவசங்களை மட்டும் வழங்குவது! இது ஒருவித கவர்ச்சியான தன்மை கொண்டது!
புரியும்படி சொல்வதானால், திமுக அடித்தட்டு மக்களை, பெண்களை மேம்படுத்துவதற்கான திட்டங்களை செய்யும். அவர்களின் கல்வி உரிமை, வேலைவாய்ப்பு உரிமை போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும். மக்களின் அறிவை, சுயமரியாதை, கருத்துகளை திமுக மதிக்கும்.
எனவே தான், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்க, அதை பாதுகாக்க திமுக தொடர்ந்து அழுத்தம் தரும். சமச்சீர் கல்வியை கொண்டுவந்து பள்ளிக் கல்வியில் அனைவருக்கும் சமநிலையை ஏற்படுத்தும். அனைத்து ஊர்களிலும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு தங்கும் விடுதிகள், அவர்களுக்கான பாடப்புத்தகங்கள், அவர்கள் படிக்க நூலகங்கள் ஆகியவற்றை திமுக செய்யும். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த நீதியரசர் வரதராஜன் என்பரை சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் தலித் நீதிபதியாக ஆக்கியது கலைஞர். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ஆகிய பிரிவு மக்களுக்கு தனி அமைச்சகம் மூலம் எண்ணற்ற உதவிகள் செய்தது கலைஞர். தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை கிடைப்பதில் திமுக அரசு அக்கறை காட்டும். மூவாலூர் அம்மையார் திருமண உதவித் திட்டத்தின் மூலம் பெண்களை ஒரு குறிப்பிட்ட வகுப்பு வரை படிக்க வைத்து, பின்னர் அவர்களுக்கான திருமணத்துக்கு உதவி தருவது, விதவைப் பெண்களுக்கான உதவி, எல்லாவற்றுக்கும் மேலாக பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை ஆகியவற்றை செய்தது கலைஞர். கலப்புத் திருமணத் தம்பதிகளுக்கு அரசு உதவி, சமத்துவபுரங்கள், உழவர் சந்தை, அண்ணா நூற்றாண்டு நூலகம், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம், தமிழறிஞர்களுக்கு விருதுகள், மாவட்டந்தோறும் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் அமைத்தல் என்று திமுகவின் மக்கள் மேம்பாட்டுத் திட்டங்கள் பட்டியல் நீளும். இந்த பட்டியலில் விடுபட்ட திமுகவின் திட்டங்களை நீங்களே நிரப்பிக் கொள்ளலாம்!
ஆனால், அதிமுகவின் திட்டங்கள் எப்படிப்பட்டது?
மக்களுக்கு இலவசங்களை மட்டுமே தருவது. அதிமுக கையாளும் Protection Populism என்பது, மக்களுக்காக நான் இருக்கிறேன், மக்களை நான் பாதுகாப்பேன், மக்கள் எதைப் பற்றியும் கவலைப்படவோ சிந்திக்கவோ தேவையில்லை என்று சொல்வது. மக்கள் தங்களின் உரிமைகளைப் பற்றிக்கூட நினைக்கக்கூடாது. வேளாவேளைக்கு சாப்பிட வேண்டும் பிறகு உழைக்க வேண்டும் பின்னர் நிம்மதியாக தூங்க வேண்டும். தங்களின் சமூகநிலை குறித்த சிந்தனையெல்லாம் வரவேக் கூடாது! பெண்களுக்கும் இதுதான்! மக்களை ஆட்டுமந்தைகளாக நடத்துவது! மக்களை மட்டுமோ? தன்னுடைய அமைச்சர்களையே இப்படிதான் நடத்துகிறார்கள். அமைச்சர்களுக்கும் சிந்திக்கும் வேலை இருக்கக்கூடாது, அவர்களுக்குகூட அவர்களின் பணிகளை செய்யும் உரிமை கிடையாது. எல்லாவற்றையும் ‘அம்மா’ வே பார்த்துக் கொள்வார்!
Paternalist Populism என்பதில் Paternalist என்பதற்கான பொருள், ஒரு தகப்பன் நிலையில் இருந்து மக்களுக்கு தேவையான பொருட்களைக் கொடுப்பது.
இப்போது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் ஜெயலலிதா பேசுகிறாரே “ஒரு தாய்க்குதான் தன் மக்களுக்கு என்னென்ன தேவை என்பது தெரியும்”. இதுதான் Paternalism என்பதற்கான அர்த்தம்! எம்ஜிஆரும் மக்களை இப்படிதான் வைத்திருந்தார்!
அம்மா உணவகம், அம்மா தண்ணீர், அம்மா உப்பு, அம்மா மருந்தகம் இவையெல்லாம் Paternalist Populism வகையைச் சார்ந்தவை. இங்கே மக்களுக்கான உரிமைகளுக்கோ, அவர்களின் வளர்ச்சிக்கோ வேலையே இல்லை. ஆனால், என்ன ஒரு விநோதம் என்றால், மக்கள் இதுபோன்ற கவர்ச்சித் திட்டங்களைதான் விரும்புவார்கள். இதுதான் அவர்களை கவரும். விலையில்லா ஃபேன், மிக்ஸி, கிரைன்டர் வரிசையில் இப்போது விலையில்லா கைப்பேசி அறிவிப்பு!
திமுகவும் இலவசங்களை தந்திருக்கிறது. ஆனால், அவற்றின் தன்மை வேறு. தகவல் அறிவது மக்களின் உரிமைகளில் ஒன்று. Right to Information என்பது. மக்கள் தகவல் அறிந்தவர்களாக இருக்க வேண்டும். அதற்கு பெரிதும் பயன்படுவது கலைஞரின் இலவச வண்ணத் தொலைக்காட்சி. அதை மக்களுக்கு நாடகம் பார்ப்பதற்கு பயன்படுத்தினாலும், ஜெயலலிதா வெளியிட்ட தேர்தல் அறிக்கையையும், அவரின் பிரச்சாரத்தையும்கூட மக்கள் அந்த தொலைக்காட்சியில் பார்த்துதான் தகவல் தெரிந்துகொள்கிறார்கள்!
அதிமுகவை எதிர்கொள்ள திமுகவும் சில சமயம் Paternalist Populismத்தை கையாண்டு இருக்கிறது. அதேபோல், அதிமுகவும் சில சமயம் Empowerment Populismத்தை கையாண்டு இருக்கிறது. ஆனால், இவை விதிவிலக்குகள்!
ஆனால், பரந்துபட்ட அளவில் திமுகவின் அரசியல் மக்கள் மேம்பாட்டுக்கானது. அதிமுகவின் அரசியல் மக்களின் மந்தைத்தன்மைக்கானது!
நன்றிகள்:- வெற்றிக்கொண்டான்
No comments:
Post a Comment