3 வருடங்களுக்கு முன்பு அம்மா-அப்பா யாரிடமும் கேட்காமல் எனது உடல் உறுப்புகளை தானம் செய்துவிட்டேன். நான்கைந்து மாதங்களுக்குப் பின் வீட்டிற்கு எனக்கான உறுப்பு தான அடையாள அட்டை வந்தபோதுதான் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். 7 வருடம் தவமிருந்து பெற்ற பிள்ளை உறுப்புக்களை ஊருக்கு தானம் கொடுத்துள்ளதே என உளமெங்கும் குமுறல்கள். முன்பெல்லாம் ரத்த தானம் பற்றி பேசும்போது கூட அப்பாவிற்கு தலையில் கொம்பு முளைக்கும் அளவிற்கு கோபம் வரும். அம்மா கண் கலங்கி நிற்பாள். இந்நிலையில் எல்லாவற்றையும் முடித்துக்கொண்டே வந்துவிட்டேன் என தெரிந்ததும் இப்படிப்பட்ட திட்டுதான் என்றில்லை. இடையே குரல்கள் நடுங்க, கண்கள் மிளிர, வாய் குளற பெத்த பாசத்தை இருவரும் மாறி மாறி என் முன்னே கொட்டி வைத்தனர்.
கண்ணீரும் கவலையுமாய் வெளவெளத்துப் போய் நின்று கொண்டிருந்தேன். ஆனாலும் மனம் திடகாத்தியமாகத்தான் இருந்தது.
அவர்களின் விசும்பல்களுக்கு பின், பொறுமையாக அம்மாவிடம் பேசினேன். அம்மாவின் மடியில் தலை வைத்து அன்று எனக்குத் தெரிந்த உயிர்-உடல்-வாழ்க்கை-மனிதம் என சில தலைப்புக்களை ஆற்றிக் கொண்டிருந்தேன். அப்பா தன் மீசை சோர்ந்துபோகும் அளவிற்கு என் பேச்சை வெறிக்க வெறிக்க கேட்டுக்கொண்டிருந்தார். சில நிமிடங்களிலேயே அம்மாவின் முகத்தில் பெருமிதம் கலந்த சிரிப்பு தெரிந்தது. அம்மா புரிந்துகொண்டார். ஆனால் அப்பா புரிந்துகொண்டாலும் ஏற்றுக்கொள்ளவில்லை.
கடந்த தீபாவளிக்கு ஊருக்குச் சென்றபோது இருவரும் என்னிடம் கேட்டுக்கொண்டனர்; "நாங்களும் உடலுறுப்பு தானம் பண்ணலாம்ன்னு இருக்கோம் கண்ணு".
அவர்களது தான முறைமைகளை வழிநடத்தியப் பின் வழக்கம்போல் என் மண்டைக்குப் பின் சக்கரம் சுழன்றது.
அடேய் அருண் வினோ... உன் குடும்பத்தை வெற்றிகரமா சீர்திருத்திட்ட டா... என!!
உடலுறுப்புகளையும், உதிரத்தையும் தானமாகக் கொடுப்பது மதக் கோட்பாடுகளை மீறிய செயல் என்ற காலம் போய், இன்று வாழும்போதே மனிதன் குருதிக்கொடையளிக்கிறான். இறந்த பின்னர் கண்களை கொடைளிக்கிறான். இன்றைக்கு உடல் உறுப்புகளையும் கொடையாக வழங்கக்கூடிய அளவிற்கு வாழ்வியல், மனிதவியல் பக்குவங்களை அடைந்துள்ளான்.
இன்று உடல் உறுப்பு தானம் என்பது உணர்வுப்பூர்வமானதொரு தியாகமென எண்ணும் அளவிற்கு இளைஞர்கள் பக்குவப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக தமிழகம் தான் உடல் உறுப்புக்களை தானமளிப்பதில் முதலிடம் வகிக்கிறது என்பது பெருமிதப்படக்கூடிய விடயம்.
காரணம் ஹிதேந்திரன் என்ற தனி நபர். 2008ல் சென்னையில் நடந்த ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தவர்தான் ஹிதேந்திரன். டாக்டர் தம்பதியினர் அசோகன் - புஷ்பாஞ்சலி அவர்களின் மூத்தமகன்.
விபத்தில் குருதியையும் உயிரையும் இழந்து கிடந்த தங்கள் மகனை வெற்றுடலாய் எண்ணி எண்ணி அழுதிடாமல், அவனை மீண்டும் உயிர்ப்பிக்க துடித்தனர். ஆம்...அவனது அனைத்து உறுப்புகளையும் தானமாக அளிக்க சற்றும் தயக்கமின்றி முன்வந்தனர். மருத்துவத் துறையினரோடு காவல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளும் கை கோக்க, இந்த தானம் மிகத் துரிதமாக யாருக்குத் தேவையோ அவர்களைச் சென்றடைந்தது.
ஊடகங்கள் இதைப் பெரிய அளவில் எழுத, தமிழகத்தில் உடலுறுப்பு தானம் பற்றிய மிகப் பெரிய விழிப்புணர்வு பரவியது. இதன் தொடர்ச்சியாக, மூளைச்சாவு உடல் உறுப்பு மாற்றுத் திட்டம் தொடங்கப்பட்டது. மரணிக்கும் பெருமகன்கள் இத்திட்டத்தின் கீழ் இன்று பல உயிர்களுக்கு மரணமில்லா பெருவாழ்வை நல்கி வருகின்றனர்.
2008 அக்டோபர் முதல் 2015 மே மாதம் வரை மூளைச்சாவு அடைந்த 528 ஆண்கள், 121 பெண்கள் என மொத்தம் 649 பேரின் உடல் உறுப்புகள் தானம் அளிக்கப்பட்டுள்ளன. இவர்களிடமிருந்து மொத்தம் 3,572 உறுப்புகள் தானம் பெறப்பட்டுள்ளன.
இது தவிர வாழ்ந்து கொண்டிருக்கும் பலரும் தங்களது உடலுறுப்புகளை தானம் செய்து வருகின்றனர்.
விரைவில் நீங்களும் செய்து விடுங்கள்....!
ஆக்கம்: அருண்வினோ
TamilNadu Network for Organ Sharing:

No comments:
Post a Comment